பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

219




53. தேடும் மனிதனாய் நீயே ஆகுக!

"அன்றொரு நாள்!”
ஏசுபிறப்பதற்கு ஈரிரண்டு நூறு ஆண்டுகளுக்கு முன்
டயாளிக்ஸ் என்ற அறிஞன்
நகர்ப்புறத்துத் தெருக்கோடியில்
பட்டப் பகலில் கைவிளக்குக் கொண்டு
எதையோ தேடினான்! தேடினான்!
என்ன தேடுகிறாய் என்று கேட்டனர் - இதைப்
பார்த்தவர்கள்!
"ஒரு மனிதனைத் தேடுகிறேன்!” என்றான் அறிஞன்:
அன்று தேடப்பட்ட மனிதன், இன்னமும் அகப்படவில்லை:
மனிதனைத் தேடும் முயற்சி தொடர்கிறது!
ஆயினும் ஏன்? மனிதன் காணப்பட்டானில்லை!
உலகில் பலகோடிபேர் வாழ்ந்தும்
ஒரு மனிதனைக் காணோம்!
உடல் உருத்துப் பருத்து வளர்ந்து நின்றாலும்
ஆன்மாவில் முதிர்ச்சி வேண்டாமா?
மனிதம் - மனிதப்பண்புகள்,
குவலயத்தை ஈர்த்தணைத்திடும் குணங்கள்,
கொள்கையில் உறுதிப்பாடு, பயணிட்டத்திற்குப்
பலியாகாமை,
திண்ணிய நெஞ்சம், கொண்ட குறிக்கோளில் உறுதி,
வாழ்நாள் முழுதும்
அன்பின் சார்பில் இயங்கும் பெருவாழ்வு -
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
நன்மை என்று விளங்கும் நலம் சார்ந்த பெருவாழ்வு
யாரிடம் உண்டோ, - அவன்
அந்த ஒரு மனிதன் எங்கிருக்கிறான்?
ஏன் தேடுகிறீர்கள்?
தேடும் முயற்சியிலும் வாழும் முயற்சி எளிதல்லவா?
ஏன்? நீயே அந்த ஒரு மனிதனாக
வாழ்ந்திடக் கூடாதா?