பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

229




63. செவிச் செல்வம்!

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்!
மதிப்புயர் வுடையது அது!
மற்றவர்சொல் கேட்பதும்
மற்றவர் வாயுரை கேட்பதுமே உயர்வு!
அயலவர் கூறும் செய்திகளைக் கேட்பதே
நண்புடையார் பலரைப் பெறுதலுக்குரிய வழி!
அழுது வடியும் முகத்துடன்
அடைபட்ட செவியுடன் கேட்டால்
அயலவரை வெற்றிகாண இயலாது!
பேசும் நாவினும் கேட்கும் காதுகள்
நண்பர்கள் பலரைத் தரும்!
சில இடங்களில் நீ கேள்!
பல இடங்களில் நீ கேட்க வேண்டிய
கட்டாயமும் தோன்றும்!
கேட்கும் பழக்கம் தரும் பயன்கள் பலப்பல!
எல்லாரும் பாராட்டுவர்!
செல்லா இடத்தும் செல்லும் செல்வாக்கு!
இதமான அன்பும் ஞானமும்
இன்னபிறவும் நல்குவதால்
செவிச் செல்வம் செல்வமே!
மற்றவர்க்கு உன் காதைக் கொடு!
அவர்கள் ஈடாக இதயத்தைத் தருவார்கள்!
புகழோடு கூடிய செல்வம் தரும், கேட்டல்!
அறிவும் விரிவடையும்!
கேட்கவும், பேசுவதைக் குறை!
கேட்கப் பழகுக!