பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

235


69. கேட்கவும் கேட்கவும்!

"காலமே எல்லா வற்றிற்கும் மையம்!
கேட்கவும் பேசவும் காலந்தேர்தல் நன்று!
நீ, பிறர் சொல்வதைக் கேட்க விரும்பாவிடில்
பிறர், நீ சொல்வதைக் கேட்பார்களா?
ஆம்! நமக்கு நம்பிக்கை யில்லாத ஒன்றைப்
பிறர் சொல்லும்போது கேட்பது கடினம்தான்!
ஆயினும், கேட்டுத்தான் ஆக வேண்டும்!
இல்லையெனில் பிறர் உன் பேச்சைக் கேட்பார்களா?
பேசு! மற்றவர்களும் பேசட்டும்!
எல்லாருக்கும் பேச உரிமை கொடு!
பிறர் பேசுவதைச் சீற்றமும் சினமும் இன்றி
நீ கேட்பின் பிறர் உன் பேச்சை
மரியாதை - வந்தனை செய்து கேட்பர்!
பெருந்தன்மை என்பது எவர்பேசுவதையும் கேட்பதே!
சுதந்திரச் சிந்தனையாளன்
வால்டேர் வாய்மொழி கேள்!
“உன்னுடைய பேச்சில் ஒருவார்த்தை கூட
எனக்கு உடன்பாடில்லை!
ஆயினும் உன்னுடைய சொல்லும் உரிமைக்கு
உயிர் கொடுத்தும் போராடுவேன்!”
என்ற அமுதமொழி தேர்க!
படைப்பிலும்
பேசும் வாய்க்குக் கதவுகள் உள்ளன;
கேட்கும் செவிகளுக்குக் கதவுகள் இல்லை;
என்பதனையும் எண்ணுக!
கேட்கவும்! கேட்கவும்! கேட்கவும்!
பேசுக!