பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

239


73. தாயின் நோன்பு!

இப்பேருலகிற்குப் பெண்ணளிக்கும் கொடை
உயர்வற உயர்ந்த தாய்மையே யாகும்!
தாய், ஆற்றல் மிக்க அன்பால்
கடவுளின் படைப்புக்கே பயனும் புகழும் சேர்க்கிறாள்!
கடவுள் படைக்கலாம் மனித உருவினை!
இயங்கு புலன்களை, பொறிகளைக் கொடுக்கலாம்!
ஆயினும்,
பொறிகளுக்கும் புலன்களுக்கும்
நெறிப்பட இயங்கும் ஆற்றலை வளர்த்து
மனிதனைப் படைப்பவள் தாயே!
தாயின் நோன்புக்கு ஈடேது?
எண்ணரிய தவங்கள் இயற்றினாலும்
பெற இயலாத எழுச்சியை,
தாயின் இதயத்தில் எழும் தோத்திரமும்
உதட்டின்வழி ஒலிவடிவமாக எழும்
இசைப் பாடலும் தரும்.
உடலாலும் மூளையாலும் திறம்பட உழைத்து
மானுட வாழ்வு வாழமுடியும் என்று
உறுதிப் படுத்துகின்றான்
தாய்தன் மகவுக்குச் சிறிது சிறிதாகத்
தனது உயிரைத் தருகிறாள்.
ஒருபுதிய உயிரை - புதுவாழ்வினை
புகழ்மிக்கு வளர்ந்த வாழ்வினை உருவாக்குகிறாள்!
தாய்தன் குழந்தைகளுக்கு
வையம்புகழ் வடிவம்! தருகிறாள்!
அவ்வழி, நாடுகளுக்கு வடிவம் தருபவள் நற்றாய்!
தாயின் தகுபுகழ்ப் பணியையே
எதிர்காலம் சார்ந்திருக்கிறது!