பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

251



84. போலியை வெறு!


நடிப்பு, நடிப்பேயாம்!
உருவாக்கும் உணர்வினை நடிப்பு தராது!
திறமையான நடிப்பு நம்பிக்கையைத் தரலாம்!
நாடகத்தால் நடித்து விளையாடல்
ஊரவரை ஏமாற்றவேயாம்!
ஆரவாரமான நடிப்பு!
இந்த உலகம் உண்மை உணருமாயின்
உண்மையை விரும்புமாயின்
போலீசுக்கு ஏதுஇடம்?
நடிப்பு நல்ல தோற்றம் காட்டும்!
ஆயினும்,
ஆட்டுத்தோல் போர்த்த புலியேயாம்!
நல்லன பேசுவர்!
சொல்லிய சொல்லைப் பேணார்!
காட்சிக்கு நல்லவிதமாய்க் காட்டுவர்.
ஆயினும்,
காசு பண்ணும் குறியே குறி!
இது தவறு! நடிப்பு நல்லதாக இயலுமா?
போலி உண்மையாதல் உலகில் இல்லை;
சூது மனிதனின் சிந்தனை, சுயநலத்தையே சுற்றும்:
நடிப்பவர் நடிக்கலாம்!
இதயக் கலப்பில்லாத சொற்கள் சொன்னாலும்
சொல்லப்படாதவையே!
சொல்லொடு செயல் இல்லையாயின் அது ஒரு
பாசாங்கேயாம்!
ஆரவாரமின்றி நடந்த நல்லன என்றும் நிலைத்து நிற்பன!
செயல் இல்லாதவையெல்லாம் நடிப்பேயாம்!
கொலையும் செய்யலாம்! முட்டாளாகவும் வாழலாம்!
ஆயினும் நடித்தல் தீது!
எக்குற்றம் செய்யினும் .
நடித்தல் செய்ய வேண்டாம்!