பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

253


86. பெருமிதம் பேணு!

உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் உடன்வருவோர்
பலர்!
அவருள் துணையாக நிற்பவர் சிலர்!
குற்றங்குறைகளால் தொல்லை தருபவர் சிலர்! இஃது
இயற்கை!
அவர்தம் குற்றம் குறைகளை, பிழைகளை நீ ஏற்கும்
வகையால்
வாழ்க்கையின் வெற்றியும் இன்பமும் அமைந்து கிடக்கிறது!
உன் வாழ்க்கை எப்படி? குறைவிலா நிறைவா, என்ன?
உன் குற்றங்களை, பிழைகளை நீ கட்டா எரித்து
விடுகிறாய்?
தற்சலுகையுடன்,
"தவறிப் போய்விட்டது என்ன செய்வது?”
என்றுதானே நீ சமாதானம் செய்து கொள்கிறாய்!
ஏன்?
அயலவரிடம் நியாயப்படுத்தவும் செய்யவில்லையா?.
அதுபோலவே, மற்றவர் குற்றங்களையும் கருதுக!
உன்னுடன் இருப்பவரில் பலர்
பச்சை மண் பானைகள்!
உன்சினம் கண்டு உள்ளம் உடைந்து போவர்!
யாருடைய உள்ளமும் உடைந்துபோகச் செய்யாதே!
அவர்களுக்கும் நன்றே செய்க!
பாதுகாப்புணர்வு தந்திடுக!
அவர்தம் வளர்ச்சிக்குத் தடையாக இராதே! உதவி செய்க!
குற்றச் சாட்டுகளுக்கு முந்தாதே!
அவர்தம் உள்ளப்புண் ஆற்ற, விரைந்து தொழிற்படுக!