பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

261


92. மூடத்தனம்!

ஏ, மனிதனே!
உன் சுதந்திரத்திற்கு உலைவைக்கும்
மூடத்தனத்திற்கு அடிமையாகாதே!
மூடத்தனம் புதியன எண்ண இடங்கொடாது!
மூடத்தனமே சிந்தனைப் புலனை மூடும் கருங்கல்!
மூடத்தனம் தேவதைகளை மண்டியிடச் செய்து
கேலிக்குரிய பொருளாக்கும்!
மூடத்தனம் காட்டும் உயர் தேவதை
உண்மையில் உயர் தேவதையன்று;
தேவதைகளை நம்பிக் கிடப்போர்
உலகில் வெற்றி கண்டதில்லை!
மூடத்தனம் உடையாரைச்
சூதுள்ள பூனைகூட வெற்றி கொள்ளும்!
பூனை குறுக்கே ஒடினாலே முடிந்தது கதை!
ஏற வைத்த ஏணிகூட மூடத்திற்கு உதவாது!
உடைந்த கண்ணாடிபோல் வாழ்வர்!
மூடத்தனத்தில் முடங்கிக் கிடப்போர்
வாழ்க்கையின் சிக்கல்களுக்குத் தீர்வு காணார்!
அகட விகடத்தில் காண முயல்வர்
குல்லாவிலிருந்து எலியை இழுப்பார் போல
ஐயோ, பாவம்!
மூடத்தனத்தில் மூழ்கிக் கிடப்போர்
எவருக்கும் உதவியாக இரார்!
அவர்கள் அவர்களுக்கே உதவி!
மூடத்தனத்தின் முழு விளைவு நிர்வாணமான சுயநலம்!
இன்னமும் பூர்வ குடிகளின்
நம்பிக்கைகளைச் சுமந்து வாழ்வதா?
சிந்தனை செய்க! மூடத்தனம் அகற்றுக!
புதிய சிந்தனையுடன் வளர்க! வாழ்க!