பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

271


101. எண்ணித் துணிக!

எவர்கூறும் எதையும் உள்வாங்காதே!
உள்ளத்திற்குள் எதையும் அனுமதிக்காதே!
முன்பே நமது உள்ளத்தில் அடைபட்டுக் கிடப்பன
ஆயிரம் ஆயிரம் செய்திகள்!
உள்ளத்தில் கிடப்பன உறுதிபெற
உற்றுழி உதவுவார் தேவை!
நல்லன தோன்றலாம்! ஆயினும்
நாம் நினைக்கிறபடி நாம் புத்திசாலியல்ல!
நல்லது தீயது கண்டு விலக்க
நமது புத்திசாலித்தனம் போதாது!
நாம் இருக்கவேண்டிய நிலையில் இல்லையே!
நல்லவர்களே கூடக் கூறலாம்!
ஆயினும் நம் நலனுடன் வேறுபடலாம்!
அவர் கூறுவதைப் பற்றிப் பேசுக! சிந்தனை செய்க!
இறைவன்முன் நிகழ்த்தும் பிரார்த்தனையானாலும்
நல்லது - தீயது காட்டும்படி இறைஞ்சுக!
அவர் கூறியன நினைந்தே உறங்குக!
விழித்து அசைபோடுக! ஆயினும்
உள்ளத்தில் விழுங்கி விடாதே!
அவர்தாமும் கூறும் செய்தி
நினக்கு நலம் பயக்கும் எனத்
தேறித் தெளியும் வரை கொள்ளற்க!
எவர் உரையும் எண்ணற்பாற்று!
எண்ணித் துணிக! துணிந்து தொழிற்படுக!
இதுவே வாழும் நெறி!