பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


104. பொய் போக்கி வாழ்!

உண்மை பேசுதல் வசதி - சுகம்!
பொய் பேசுதல் தொல்லை!
ஒரு பொய் பல பொய்களை ஈன்றெடுத்து
உறங்கா நிலையை உருவாக்கும்!
உண்மையைப் பேசினால் மறக்கலாம்!
ஆனால், பொய்யோ மேலும் மேலும்
கண்டவாறெல்லாம் கேட்புகளை உருவாக்கும்!
அப்பட்டமான உண்மைக்கு மறைப்புகள் தேவையில்லை!
பொய்க்கு மறைப்புகள் தேவைப்படும்!
சொன்ன பொய்யினைப் பாதுகாக்கப்
பல்வேறு முயற்சிகள் தேவை!
பொய் வசதியுள்ளது போலத் தெரியும்!
ஆனால், பொய்க்கு வன்மப் புத்தியும்
பொய், பொய்யாகாமல் காக்க
நீங்கா நினைவாற்றலும் தேவை!
பொய், பொய்யென அறியப் பெற்றால்
ஆயிரம் ஆயிரம் இழப்பு!
உண்மையே பேசுக!
பொய் தேவை இல்லை!
குற்றத்திற்குப் பொய் தேவைப்படலாம்!
பொய் சொல்லிக் குற்றத்தை மறைப்பதற்குப் பதிலாக
வளர்ந்துவரும் பொய்களுக்குப் பதிலாக
உண்மையே பேசிப் புகழொடு வாழ்க!