பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


106. நேற்று, இன்று, நாளை!

நாளும் நாள்கள் கழிகின்றன!
ஓடிய நாள்களில்
உரிமைப்படுத்திக் கொண்ட நாள்கள் எத்தனை?
எத்தனை?
கடமைகளுக்குக் காலம் ஏது? வயது ஏது?
இன்றைய நாள் உன்னுடைய நாளாக ஆகுமா?
அல்லது உன்னிடமிருந்து
எனக்கே உரியநாள் தட்டிப் பறிக்கப்படுமா?
ஏன்?
நான் முயன்றால் இந்த நாளை
எனது வாழ்நாளாக உரிமைப்படுத்தலாம்!
இன்றைய நாளைப் பயன்படுத்தும் வகையில்
எனது பார்வை - பழக்கம் தொடங்கினால்
இன்றைய நாள் என்னுடைய நாளாகும்!
இல்லையெனில் இந்த நாள்
வம்புக்காம்! வழக்குகளுக்குமாம்!
தூர்த்தரும் கூற்றுவன் துரதரும் தட்டிப் பறிப்பர்!
நாளை உரிமைப்படுத்த
மூச்சுவிட்டால் போதுமா?
அல்லது சாகாமல் இருந்தால் போதுமா?
வாய்த்த இன்றைய நாளை வாழ்முதலாக்க
அயரா முயற்சியின் மேற்செல்க!
இன்று இளையாள் என்றும்
நாளை மறுநாள் மூத்தோள் என்றும்
பலபடக் கூறி உன் ஆள்வினைக்குத்
தடைகூறும் பயனில் உரைகளுக்குச்
செவிப்புலனைத் தராதொழிக!
அசைவில் முயற்சிக்கு வயதுகள் வரம்பல்ல!
நாள் வரும் போகும்; அந்த நாள்களை மூலதனமாக்கி உரிமைப்படுத்தலே எனது பிறப்பின் பயன்
படைப்பின் பாங்கு!