பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

287


116. குற்றம் காணேல்!

குற்றங்கள் காண்பது எளிது! ஏன்?
குற்றங் காண்பதில் காண்பவன் மனநிலையே
வெளிப்படும்!
மலர்ந்து மணம்வீசும் பூந்தோட்டத்தில்
பிணந்தின்னும் கழுகுகள் பறந்தாலும்
மணம் நுகரா: அழுகிய பிணம் தேடிடும்!
அதுபோலக் குற்றமே காணும் இயல்புடையோர்
ஒருவர்மீது குற்றம் காணும் முயற்சியால்
பல நல்ல குணங்களைக் காணத் தவறுகின்றனர்
குற்றமே காணும் போக்கு வளர்கிறது!
காணப்படும் குற்றங்கள் காணப்படும் இடத்தில்
உண்மையாக இல்லை! குற்றம் காண்பவரிடமே
குற்றங்கள் உள்ளன!
உதவியும் ஒத்துழைப்பும் தந்து
ஒருவரை வாழ்க்கையில் உயர்த்துவதற்குப் பதில்
குற்றம் காண்பதில் யாதொரு பயனுமில்லை!
குற்றம் காணும் முயற்சியைத் தவிர்த்துக்
குணங்களைக் கண்டு துரண்டி வளர்த்தால்
இருபாலும் பயனும் பண்பும் விளையும்!
குணமே காண்க: குணமே கொள்க!