பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிந்தனை யாலே சிறக்கும் சிற்பம்!
ஒழுக்கத் தாலே உயரும் வடிவம்!
இறையருள் காட்டும்இஃ துணர்ந்தவர் சிலரே!
அண்ணல் காந்தி யடிகள் ஆழிசூழ்
உலகில் தோன்றினார்; உணர்வால் அறிவால்
உள்ளம் தேறினார்; ஊருக் குழைத்தார்;
கொச்சை அடிமை கண்டு கொதித்தார்;
ஆண்மை சான்ற அறப்போர் தொடுத்தார்!
அரித்துக் கெடுக்கும் ஆசையி னின்றும்
அண்ணல் ஆன்மா விடுதலை பெற்றது!
அதனா லன்றோ அன்னை பாரதம்
விடுதலை பெற்றது! வியப்பிது வாமோ?
சிதறிக் கிடக்கும் கற்களை எடுத்துச்
சேர்த்து அடுக்கினால் வீடது தோன்றும்!
சிந்தனை சிதறா வண்ணம் தொகுத்துச்
செயற்ப டுத்திடின் வாழ்வு மாளிகை
ஆகும்! வையகம் இன்பப் பூங்கா
ஆகும்! மகாத்மா மந்திர வாதி
அல்லர்; மண்ணில் தோன்றிய மனிதரே!
கருத்தைக் கடவுளின் பாற்செ லுத்தினார்;
உளத்தை ஒழுக்கத் தேநிலை நிறுத்தினார்;
ஏங்குபா ரதத்தை இன்பவீ டாக்கினார்;
சிரித்த முகத்தில் சிந்தனை தேக்கினார்;
ஒயா துழைத்தார் உறுதிகள் பெற்றார்;
ஏவினா ரில்லை; இயங்கிக் காட்டினார்!
நந்தம் மடத்துக் கொல்லைப் புறத்தில்
மகிழ மரமொன் றுண்டுஅம் மரமோ
பழைய இலைகளும் புதிய தளிர்களும்
தழைய நின்றது! காந்தி யடிகள்
அனையது போல்வர். அவர்தம் சிந்தனை