பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


117. சூடான உணர்வு

தலைமை சூடாக இருக்கும்போது
எந்தச் சூழ்நிலையிலும் தலையிடுவது நன்றன்று!
இரும்பு தனது கடினத்தன்மையை இழப்பின்
கூர்மையையும் இழக்கும்!
அதுபோலத்தான் மனிதனும் கடினமான சுபாவத்தை
இழப்பின்
நுழைபுலத்தை இழப்பான்!
எவரும் தமது கடின உணர்வுகளை இழப்பது
கடினமான காரியமல்ல!
வெகுளுதற்குரிய நேரம் கண்டு வெகுளுதல்,
வெகுள வேண்டியதற்காக வெகுளுதல்,
அனைத்தும் அறிந்து வைத்துக் கொண்டு வெகுளுதல்
நன்று!
இது அவ்வளவு எளிதன்று!
பெரிய மனிதர் தம்மினும் எளியாரை நோதல் -
தம் உணர்வுநிலை தவறுதல் பிழை!
உணர்வில் பெரிய மனிதர்
குளிர்ந்த உணர்வுகளைச் சுமந்த மனிதர்
மனித நேயச் சந்தையில் தீவிரமானவர்
பெருந்தகைமை உடையவர்
ஒரு பொழுதும் ஓங்கி அடிக்கமாட்டார்!
சின்னப் பாத்திரம் எளிதில் சூடேறும்!
அது போல, சின்ன மனிதர் எளிதில் சூடேறி விடுவர்!
பெரிய மனிதர்கள் உணர்வு நிலையில்
இம்மியும் எளிதில் விழார்!
போதும்! போதும்! உணர்வுநிலை இழவற்க!
உணர்வுநிலையைத் தற்காத்திடுக!
செயல் துடிப்புடைய கடின உணர்வில்
நின்று வாழ்க!