பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


123. கவலைக் கடல்!

ஒ, மனிதனே!
நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கிக்
கவலைக் கடலுள் மூழ்குகிறாயா? -
ஐயோ, பாவம்! வேண்டாம்! வேண்டாம்! எழு!
உன் கவலைகளை ஆழப்போட்டுப் புதைத்து விடு!
ஒரு தடவை கவலையைப் புதைக்கக் கற்று விட்டால்
தொடர்ச்சியாகப் பல கவலைகளைப் புதைக்கலாம்!
பல தாமே புதை குழி நாடிடும்!
மனிதகுலத்தைக் கொல்லும் கவலையை
அறவே விலக்கு!
கவலையின் வாசனையே வேண்டாம்!
உனது சிக்கல்களை ஆய்வு செய்க! தீர்வு காண்க!
கவலை ஒருபோதும் தீர்வு தராது!
தக்கார் அறிவுரையை நாடிப் பெறுக!
அந்த அறிவுரை சிக்கல்களுக்குத் தீர்வுகாணத்
தூண்டித் தொழிற்படுத்தும் என்பதறிக!
முன்னேபார்! பின்னே பார்க்காதே!
உன்முன்னே உள்ள அகன்ற பாட்டையில்
எண்ணில் அடங்கா வாய்ப்புக்கள் உள்ளன!
உன் மூளையிலிருந்து இடர்ப்பாடுகளை அகற்றுக!
இடர்ப்பாடுகள் என்றும் ஏற்கலாகாதவை!
உன்னுடைய இடுக்கண்களைக் கணக்கிடு!
நீண்ட தொலைநோக்கு பெறுவாயாக!
வாய்ப்புக்களும் வெற்றிகளும் வேண்டின்
நெடிய பார்வை தேவை!
உன் சிக்கல்கள் உன் கதவைத் தட்டும் பொழுதே