பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



130. முள்ளும் மலரும்!

வாழ்க்கையைக் கவனமாக நடத்துக!
வாழ்க்கையின் பொறுப்புக்களைக்
கவனமாக ஏற்க வேண்டும்; இயற்ற வேண்டும்!
பொறுப்புக்களில், கவனம் தவறின்
பொறுப்புக்கள் நம்மைத் துரத்தும்!
இன்றையநாள் நம்முடைய நாள்!
தேவையில்லாத பொறுப்புக்களைச் சுமந்து
நாள்களைக் கழிப்பானேன்?
நான் வாழ ஆசைப்படுவது உண்மை!
நான் வாழ்க்கையின் அக்கரைகளைத் தேடுகின்றேன்!
ஆயினும்,
வாழ்க்கையை அலைக்கும் ஆசைகளினாலும்
கனவிலும் இன்னாததாகிய கவலையினாலும்
அழியவிட மாட்டேன்!
அரிப்புத் தொல்லைகளுக்கு இரையாகமாட்டேன்!
என்வாழ்க்கை ரோசாச்செடி போன்றது!
ரோசாவில் மலர்கள் மட்டுந்தானா?
மறைவாக முட்கள் இல்லையா?
அதுபோல என் வாழ்க்கையிலும்
மறைந்துள்ள சங்கடங்கள் தெரிகின்றன!
அதுவாகத் தலைகாட்டும் வரையில்
முட்களை எவர்தொடுவர்! நான் தொடேன்!
விமானப் பயணத்தில் தோளில் மூட்டையைச்
சுமப்பது ஏன்?
வாழ்க்கைப் பயணத்தில் ஏன் கவலைகள்?
துன்பங்களை மற! மகிழ்வோடு முயலுக!