பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

313



139. வெற்றியின் வாயில்கள்!


புத்தியைத் தீட்டுக! சூழ் நிலைகளைக் கவனித்துக் கொள்க!
அந்தந்தச் சூழ்நிலைக்குத் தகவறிந்து திறமையுடன்
சிந்தித்துச் செயல்படுக.
காலத்தொடு இயைந்த சிறுபுத்திசாலித்தனம் கூட
எதிர்ப்புகளைத் தடுத்து நிறுத்தும்!
காலங்கருதிய திறப்பாடுகள்
நியாயங்கள் அறியும் புத்திசாலித்தனம்
எதிரிகளை அணுகும் பாங்கினையும்
உணர்ச்சிமிக்க போக்குகளையும் கட்டுக்குள் அடக்கி
வாழ்வு சிறக்கச் செய்யும்
மதிநுட்பம் காணும் கண்கள்
கேட்கும் செவிகள்
சதுரப்பாட்டுடன் நடத்தல் எளிது! மகிழ்ச்சி!
செயல்களைச் செய்யும்முறை, சூழ்நிலை -
அறிவுக்குத் தெரியும்.
இதமறிந்து ஒழுகுதலும் பாடறிந்து பழகுதலும்
நூறு நூறாக வெற்றிகளை அடுக்கும்.
தடைகளுக்கு வீழ்த்தும் ஆற்றல் இல்லை!
வெற்றிப்படிகளில் ஏறத் தடைகள் துணை செய்யும்.
மதி நுட்பத்தொடு இயைந்து செய்க!
வெற்றிபெறும்! ஏன்?
நெகிழ்தலும் விடுதலும் வெற்றியின் வாயில்களை
வென்றிடுகிறது!
நியாயமாக இரு! சீராக இரு!
முனைப்புடன் முயலுக! நாகரிகமாக இரு! தெளிவாக இரு!
முயற்சியில் சோர்வடையற்க! மேலும் மேலும் அழுத்தமாக நில்! பொறுமையாக இரு! ஆக்க வழி நில்! உடன்பட்டு உயர்க!
கருணையுடன் பெருமிதம் ஏற்றிடுக! நின்றிடுக! ஒழுகுக!
பழகும் பாங்கியல் தடைகளைத் தகர்க்கும்!
வெற்றிகளைக் குவிக்கும்!
நல்லவனாக இரு வல்லவனாகவும் இரு!

கு.XIV.21.