பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 நாள்வழிக் கவிதைகள்

315



141. விழு! எழு!


வாழ்க்கையில் வெற்றிதேவையா? எழு!
விழுந்த வேகத்தினும் கூடுதல் வேகத்துடன் எழு!
வாழ்க்கையில் பாதி, எழுந்து நிற்பதில் இருக்கிறது!
கீழே விழுந்து விட்டாயா? விழுந்து கிடக்காதே!
அடிபட்ட பந்து உயர்விசையுடன் எழுவது போல எழு;
விழுந்தது தெரியாமலே எழுந்து நில்! அதுவே வாழ்க்கை!
வாழ்க்கையில் பாதி முடிந்ததுபோல்
வீழ்ந்த இடத்திலேயே கிடந்தால்
வாழ்க்கையில் பாதி போய்விடுகிறது!
பாதி கழிந்தபின் ஏதுமுதல்? ஏது முழுமை?
கதவைத் தட்டுகிறாயா?
கதவைத் தட்டினால் கதவு திறக்கப்படாமல்
ஒடிஆடி அசையலாம்! ஆனாலும் ஆபத்து வந்துவிடாது!
இதயம் பொறுத்தற்கியலாத கடுஞ்சொல்லால்
சுடப்பட்டாயா? கவலற்க!
வாழ்க்கைக்குரிய பிழைப்புப் பணியினை இழந்து விட்டாயா?
முதலீடு முழுகி விட்டதா?
நம்பிக்கை மோசம் போகிறாயா? உடல் நலத்தில்
சீர்குலைவா?
உன்னால் நேசிக்கப்பட்ட ஒருவர் இறந்து போனாரா?
இவற்றில் எதுவாக இருந்தால் என்ன?
எவையாக இருந்தால் என்ன? கவலற்க! எழுந்து நில்!
இவையெல்லாம் தடுமாறச் செய்யலாம்!
உன்னை வீழ்த்த இயலாது! உன்னைத் தேற்றிக்கொள்!
உன்னுடைய உணர்வுகளைச் சம நிலைப் படுத்து!
வாழ்க்கைப் போரைப் புதுப்பித்துக் கொள்!
அலை அலையென வரும் இடர்களைப் புறத்தே தள்ளு!
ஆவேசத்துடன் எழுந்து நில்!
வாழ்க்கைக் களத்தில் நின்று போராடு!
இதுவே எழுச்சியின் சின்னம்! வெற்றியின் வாயில்கள்!