பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

21


பெண் ஒரு சாதி; அது "பெண் சாதி”!
வீட்டில் கிடக்கும் பெட்டி படுக்கையாய்ப்
பெண்ணும் ஒருபொரு ளானாள்! பேச்சு
மூச்சும் அற்றுப் போனாள் பிணமாய்;
பிணத்தின் பிள்ளை பேசுதல் ஆமோ?
பெண் அவள் அடிமை யானாள்! உலகில்
பிறந்த நாமும் அடிமை யானோம்.
பாரதி கண்ட புதுமைப் பெண்மை
அன்பின் சிகரம்; அநீதியைச் சீறும்;
காதலுக் கின்பம்; காமத்துக் குப்பகை!
பாரதி பெண்மை பாரிற் செய்பணி
ஏராளம்! பெண்ணை இனிய தாயாக்கி
விடுதலை யதற்கு வித்திட் டான் அவன்!
ஆடினான் பள்ளுப் பாடினான் அடடா!
ஆனந்த சுதந்திரம் ஆர்ந்திடச் செய்தான்!
சுதந்திரம் சொர்க்க வாச லுக்கோ?
பழைய விதியது பத்தாம் பசலி
விதியென் றான்.ஒரு புதுவிதி சமைத்தான்!
சங்கரன் தயவால் சந்துபொந் துகளில்
சதுரால் சகத்தினைச் சுரண்டிய சழக்கரைச்
சாடினான்! "எல்லோரும் ஒர்நிறை ஒர்குலம்"
இஃதுஅக் கவிஞனின் சங்க நாதம்!
சமதரை இருந்து உண்ணலாம் ஆனால்
மேடுபள் ளத்தில் மேதினி யில்இலை
விரித்துண் பாரும் உளரோ? இலையினில்
இட்ட பொருளும் கிடக்குமோ? செல்வ
ஏற்றத் தாழ்வில் இனிய ஒழுக்கமும்
உயர்அருள் நெறியும் பேணல் ஒல்லுமோ?
இதுகவி ஞன்வினா. எழில்தமிழ்க் கவிஞர்காள்
விடையது பகர்க!