பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



148. மனித அடையாளம்


பயந்து நிற்காதே!
இடர்ப்பாடுகளைக் கண்டு கலங்கி நிற்காதே!
இடர்ப்பாடுகள்தான் மனிதனை அடையாளம் காட்டுகிறது!
மனிதன் எப்படி இருக்கிறான்? எதனால் ஆகிறான்?
அறிந்துணர இடர்ப்பாடுகளே துணை!
உன் வழியில் கடுமையான தடைகள் வரும்பொழுது,
நீ, அவைகளைத் தாண்டி ஏறு! மேலே ஏறு!
நீ உயர் நிலையை அடைய
இடர்ப்பாடுகள் படிக்கற்கள்!
இடர்ப்பாடுகள் இல்லையேல் நீ ஏது?
இது வளர்ச்சியின் இயற்கை நியதி! விதி!
வலிமைக்கு வழி இடர்ப்பாடுகளேயாம்!
வெள்ளித் தட்டில் சுவைமிக்க உணவு!
ஒய்வு நாற்காலியில் ஒய்வு!
வீட்டிற்குள்ளேயே அரட்டைக் கச்சேரி!
இவை எப்படி மனிதனை உயர்த்தும்!
மலைமேல் ஏற அயர்விலா முயற்சி தேவை!
மலை முகட்டில் நின்று பார்ப்பதில் மகிழ்ச்சி!
கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் நடத்தலில்
எத்தனை இடர்ப்பாடுகள்?
முட்களும் கற்களும் கால் பாதங்களில் பட்டுப்
பாடம் கற்பிக்கின்றன!
முன் எச்சரிக்கைப் பாடமும் முட்களே
கற்றுத் தருகின்றன!
இரக்க உணர்ச்சியும் நடைபாதையே கற்றுத்தரும்
இவையெல்லாம் கடந்து எல்லையை அடையும் போது
பாராட்டுக்கள் குவியும்!
அஞ்சற்க!
இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு முன்னேறு!
இதுவே வாழ்க்கை!