பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

323



149. கூண்டுக் கிளி

மனிதன் எண்ணுதல் வேண்டும்.
எண்ணி வாழும் மனிதன் சுதந்திரமாக வாழ்வான்!
மனிதன் எண்ணி வாழ்வதற்கே பிறந்தவன்!
மனிதனின் அமைப்பும் அப்படியே!
மனிதன் எண்ணி வாழ்பவனாக அமைந்தது
விபத்தினால் அல்ல!
மனிதனுக்குள்ள தகுதியும் திறமையும்
அவன் தானே எண்ணமுடியும் என்பதுதான்!
மனிதமூளை என்று எண்ணுவதில்லையோ,
அன்று அவன் படித்தவனாய் இருந்தாலும்
கூண்டிற்குள் அடைபடுகிறான்!
சின்னஞ்சிறு கூண்டு!
ஆனால், இந்தப் பரந்த உலகம் எண்ணும் மனிதனுக்கே!
விண்ணும் மண்ணும் எண்ணும் மனிதனுக்கே!
நீ எண்ணவில்லையா? கூண்டிற்குள் அடைபடு!
கிளிப் பிள்ளைகளைப் போல் சிலபல பேசலாம்
ஆனால், இது வாழ்வாகாது.