பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

325


151. வாழ்க்கையின் மதிப்பு!


வாழ்க்கை முழுமையாக விளங்க
வாழ்க்கையில் இன்பங் கொழிக்க
வாழ்க்கை மதிப்புடையதாக அமைய
நடப்பதைவிடக் கூடுதலாகச் செய்!
செயலை வளர்த்திடு!
பெறுவதைக் காட்டிலும் கூடுதலாகக் கொடுத்திடு!
வருத்தப்படுவதைவிடக் கழிவிரக்கம் கொள்!
பார்ப்பதை விட நோக்கு!
அனுதாபப் படுவதை விட உதவி செய்!
திருக்கோயிலுக்குப் பலகாலும் போவதை விட
வழிபாடு செய்!
அதிகமான குழந்தைகளைப் பெறுவதைவிட,
பெற்ற குழந்தைகளை வளர்த்திடு!
வீடுகள் பல கட்டுவதைவிட
ஒர் இல்லத்தை உருவாக்கு!
பல மூச்சுக்கள் விடுவதை விட, வாழ்ந்திடு!
பல ஆண்டுகள் வாழ்வதைவிட; அன்பு காட்டு!
நாம் ஆண்டுகளில் வாழ்ந்து விடுவதில்லை;
நாம் செயல்களிலேயே வாழ்கின்றோம்;
நாம் மூச்சுக் காற்றில் வாழ்ந்து விடுவதில்லை
நாம் எண்ணங்களிலேயே வாழ்கின்றோம்!
நாம் வாழ்வது புள்ளிவிவரங்களில் அல்ல;
நாம் வாழ்வது உணர்வுகளில்!
எவன் அதிகமாகச் சிந்திக்கின்றானோ
அவன் அதிகமாக வாழ்கின்றான்;
உயர்பண்பே எண்ணுதலுக்குரியது!
நல்லனவே செய்க!