பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

331



156. வாழ்வாங்கு வாழ!


வாழ்க்கை மிகவும் குறுகியது.
ஆனால், வீணாக்க இயலாத பொருள் மதிப்புடையது
வாழ்க்கை வாய்ப்புக்கள் நிறைந்தது! மகிழ்ச்சி நிறைந்தது.
நிறைநல வாழ்வும் வாழலாம்! எப்போது?
வாழ்க்கையின் நொடிகளை வீணாக்காது வாழின் !
வாழ்க்கையை அதிருப்தியில் பாழாக்காதே!
இம்மியும் நலம்தரா உணர்ச்சியில் வீணாக்காதே!
யாரிடமும் சிடுமூஞ்சியைக் காட்டாதே!
குற்றமே கூறும் சிறுமை செய்யாதே!
எவரையும் வெறுக்காதே! யாரோடும் பகை வேண்டாம்!
பழிக்குப்பழி வாங்கும் இழி குணம் என்றும் வேண்டாம்!
குற்றங்காணாதே குணமே காணமுயலுக!
ஊர்க்கதை அளந்து விடாதே! அரட்டை அடிக்காதே!
சந்தேகப்படாதே! சோம்பித் திரியாதே! தீயொழுக்கம்
புரியேல்!
இவையெல்லாம் தவிர்த்திடில் உன் வாழ்க்கை வாழ்வாகும்!
வாழ்க்கையை எண்ணு! கணக்குப் பார்க்க உரியதாக்குக!
நாள்தோறும் வாழத் தலைப்படு!
வாழ்க்கையை வளமாக வளர்க்கும் நிறை நலன்களைப்
பெற்று வளர்க!
அன்பாக இரு! அன்பை விலை பேசாதே!
எல்லா உயிர்களிடமும் அன்பாக இரு!
மறக்கவும் மன்னிக்கவும் பழகு! பெருந்தன்மையாக
நடந்துகொள்!
தகுதியில்லாதாரையும் தகுதியுடையவராக எண்ணிப்பழகு!
இலக்கு உடையவனாக இரு! உணர்ச்சிகளை அடக்கு!