பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



164. வேடம் வேண்டாம்!


முகத்தில் ஒரு செயற்கை முகம்!
குழந்தைகளுக்குப் பொருந்தும்!
ஆனால், அது பெரியவர்களுக்கு ஆகாது!
அதுவும் ஆண்டு முழுதும்
பெரியவர்கள் அணியும் செயற்கைமுகம் பயன்தராது!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டி
நாடகம் ஆடுபவர்களின் இரண்டு நடத்தைகள்
அந்த இரண்டு நடத்தைகளும் ஒத்திசையாதபோது
அவன் பேசுவதைக் கேட்க இயலாது!
அவன் எதற்காக வாழ்கிறான்? என்ன பேசுகிறான்?
அவன் குருடனாகலாம்; குருடாக்கிக் கொள்ளலாம்!
ஆனாலும், மற்றவர் அவன் மூலம் பார்ப்பர்.
ஒரு மனிதன் தானே தன்னை
இரட்டை மனிதனாக்கிக் கொள்வானேன்?
அந்த இரட்டைத் தன்மை வளரும்; நாளும் வளரும்!
அவன் ஒரு பரிதாபகரமான சூதாடி என்ற
எல்லை வரையில் செல்வான்!
அவன் எந்த ஒரு காரணத்தாலும்
அங்கீகரிக்கப்படத் தகுதியுடையவனாகான்
பெற்றோரைக் கொன்று விட்டு
நான் தாய் தந்தையற்ற அனாதை என்று கூறுபவனுக்கு
எப்படிக் கருணைகாட்ட முடியும்?
அவன் சில நாளைக்குச் சிலபேரை முட்டாளாக்கலாம்!
அந்த மக்களை முட்டாள்களாகவும் வைத்திருக்கலாம்!
ஆனால்,
எல்லா மக்களையும் எல்லா நேரங்களிலும்
முட்டாள்களாக வைத்திருப்பது சாத்தியமல்ல!
ஆதலால்,
இரட்டைவேடம் வேண்டாம்! சூதினைத் தவிர்த்திடுக!
எப்போதும் திறந்த புத்தகமாக வாழ்ந்திடுக!