பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

349



173. காலமும் களமும்

பகுத்தறியும் இயல்பே அறிவின் சிறப்பு!
பகுத்தறியும் துணிவே துணிவு!
அத் துணிவே அறிவு!
ஒரு முட்டாள் கூடப் பேசலாம்; செய்யலாம்
ஆனால்,
அவன் பேச்சும் செயலும் காலத்தொடு இசைந்தவையா?
நேரம் - சூழ்நிலை அறியாது பேசுபவன் முட்டாள்!
காலமும் களமும் அறிந்து கூறுதலே விவேகம்!
செயற்பாடுறுதலே பொருத்தமும் ஆகும்!
நரிக்குக் கூட முன்யோசனை உண்டு!
முன் ஜாக்கிரதை உண்டு
தலைவனின் செவ்வி பார்த்துப் பேசுதல்
வெற்றிக்குரிய பாங்கு!
காலமும் களமும் பொருந்தாத நிலையில்
திறமைகளும் கூடத் தோற்றுப் போகும்!
பருந்தாக வானில் பறக்கவும் சூழ்நிலை தேவை!
ஒரு நேரம் இருப்பதுபோல் ஒருநேரம் இருக்காது.
எப்போது பேச வேண்டும்?
எப்போது செய்ய வேண்டும்?
என்பதறிந்து செயற்படுவதே கல்வியின் பயன்!
அக்கல்வியின் பயன் பகுத்தறிவே!
எல்லாவற்றுக்கும் பருவ காலங்கள் உண்டு!
எல்லாவற்றுக்கும் காலமும் நியதியும் உண்டு
மெளனமாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசாதே!
பேச வேண்டிய நேரத்தில் மெளனமாக இருக்காதே!
இதுவே வாழ்க்கையின் முறை.