பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



174. இரண்டுங் கெட்டான்!


அரைக் கிணறு தாண்டியவன் கதி என்ன?
அதுபோல,
அரை குறைச் சமய வாழ்க்கையினால்
விளையும் பயன் யாது?
சமயப் பற்று,
சமயத்திற்கு எதிரிடையான சில சிந்தனைகள்
இவையிரண்டும்
சரி சமமாகிய நிலையில் யாதுமில்லை!
வெறும் சூனியமே!
கடவுளுக்காகவே சேவை செய்ய அழைத்தல்
மன்னிக்க முடியாத ஒன்று,
சூடும் குளிரும் ஒருங்கிணைதல் ஏது?
கொஞ்சம் சமயம்; கொஞ்சம் சமயத்திற்கு எதிர்நிலை!
இவ்விரண்டும் கெட்டான் நிலை வேண்டாம்
நல்லதைக் கூட
வேண்டா வெறுப்பாகச் செய்தல் நன்றன்று;
பயனுமில்லை!
இதயத் தோய்வில்லாமல்
கடவுள் முன்னே மண்டியிட்டு
மந்திரத்தைப் புரளும் நாவினால் சொல்லிச்
சப்தம் செய்யாதே!
அரை மனத்துடன் அரனை வணங்குவதென்?
கடவுளுடன் முரண்பட்டு நிற்காதே!
இதயம் முழுதும் இறைவனுக்கு ஆக்கு!
அதனால், உயர்ந்த அனுபவங்களைப் பெறு!
இதயத்தால் இறைவனைத் தொழுதல் இதயத்திற்கு
இதமாக இருக்கும்!
இதயத்தை விரிவு செய்யும்!
இதயம் இறைவனை நோக்கியும் மனிதனை நோக்கியும்
விரியும்!
நீ வலிமை பெறுவாய்!
எழுந்து நில்! எது வந்தால் என்ன?