பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




182. வேண்டாம் ஐயம்!

நம்புக! யார் மாட்டும் நம்பிக்கை கொள்க!
நம்பினவர் சிலர் மோசம் செய்யலாம்!
இழப்புகள் பல நேரிடலாம்!
ஆயினும், பலரை நம்புவதற்குப் பதிலாகச்
சிலரை மட்டும் நம்பினால் இழப்புகள் கூடும்!
சமூகத்தை இயக்க நம்பிக்கைத் தவிர
வேறு பொருத்தமான பண்பு இல்லை!
சிலர் மோசக்காரர்களாகப் போனால்
அதனால் வரும் இழப்பைப் பலர் ஈடு செய்வர்
இந்த உலகில் கெட்டவர்களே இல்லையென்று எண்ணி
நம்பி வாழ்தல் நல்லவர்கள் இயல்பு!
இந்த உலகில் நல்லவர்களே இல்லையென்று
ஐயப்பட்டே வாழ்தல் தீயவர்கள் இயல்பு!
நல்லவர்கள் தராதரப்படி நம்புவர்!
எவரையும் ஐயப்படார்!
ஐயப்படுபவரின் கண்களும் காதுகளும்
சந்தேகத்துடனேயே காணும்; கேட்கும்!
நண்பர்களை ஐயப்படுதல்
மோசம் போதலைவிடக் கொடுமையானது
வேண்டாம்! வேண்டாம்!
ஐயப்பட வேண்டாம்!
எல்லாரையும் நம்பி இந்தப் புவியை நடத்துவோம்!