பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


186. மெழுகுவர்த்தி

ஒரு சிறிய மெழுகுவர்த்தியைப் போல் விளங்கு!
பலரின் கவனத்தில் படுவாய்!
கண்ணியப்படுத்தப் படுவாய்!
மனித இயல்கள் நெடுந்துரரம் ஒளிவிடும்!
அந்த மனிதர்கள் ஒளிமிக்கவர்களாக இருந்தால்
நெடுந்தொலைவிலும் ஒளிவீசுவர்.
அண்மையிலும் ஒளிவீசுவர்!
இரவு இருளைக் கொணர்கிறது!
இருளை நீக்கி ஒளிதருவது மனிதனின் வாழ்வு!
மனிதன் முயன்றால் இருளை நீக்கி ஒளிதரலாம்!
மெளனத்தின் ஒளியைத் தவறாக எண்ணாதே!
மெளனம் சப்தமின்றியே சாதிக்கும்.
ஒளிக்கதிர்கள் ஹாரன் ஊதிக்கொண்டு வருவதில்லை!
ஒளிவிடும் அவ்வளவுதான்!
நீயும் அதையே செய்!
இந்த உலகம் உன் சொல் கேட்கும்!
உன் ஊதுகுழலாய் விளங்கும்!
ஒளிக்கதிர் எங்கு போகிறது?
எப்போது போகிறது?
எங்கு எந்த நல்ல காரியம் நடக்கிறது என்று
எவருக்குத் தெரியும்?
அந்த நல்ல காரியம் நல்ல வண்ணம்
முடிந்த பிறகே தெரியும்!
நீ அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவது
ஒருவழிப் பாதை!
அது வேண்டாம்!
ஒரு சிறிய எரியும் மெழுகுவர்த்தியைப்போல் வாழ்க!
ஒரு சிறிய மெழுகுவர்த்தி எவ்வளவு ஒளியைத் தருகிறது!
ஆதலால்,
நற்செயல்கள் மூலம் ஒளிவிடு!