பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


188. நலமும் நலமின்மையும்

மானுடம் பெற்றுள்ள பேறுகள் பலப்பல!
நன்மைகளும் சில உண்டு!
நலமும் நலமின்மையும் மாந்தருக்கு
வலிமை தருகிறது; தளர்வு தருகிறது!
ஏன்?
நன்றும் தீதும் இயல்பென எண்ணும் சால்பின்மையே!
வாழ்தலுக்குரிய அடிப்படைத் தேவைகள்
கதிரொளி; கதிரொளியின் துணையால் கிடைக்கும்
வையத்தை வாழ்விக்கும் வான்மழை
உயிர்ப்புக் காற்று! புவிக்கோளம்
உடலினை, உயிரினை வளர்க்கும் தாவரங்கள்!
காலமெலாம் காத்துநிற்கும் கால்நடைகள்!
இப்படி இப்படி எண்ணற்றவை!
இவை மட்டுமா?
ஆயிரம் ஆயிரம் இயற்கை நிகழ்வுகள்!
இவையெல்லாம் பெற்ற மதிப்பே
மாந்தர்தம் மதிப்பையும் உயர்த்துகிறது!
ஆயினும் என்?
மாந்தர் இன்று வாழ்வதில்லை!
மாந்தரில் பலர் நேற்றைய வாழ்க்கையையே
இன்றும் வாழ்கின்றனர்!
இன்னும் சிலர் இன்றும் வாழ்வதில்லை!
இன்றே நாளைய வாழ்க்கையை வாழத் துடிக்கின்றனர்!
இவர்கள் காண்பதெல்லாம் கெட்ட கனா!
இப்புவிக்கோளம் குகையாகிவிட்டால் எங்கு நிற்பது?
உயிர்ப்புக்காற்று ஓடிவிட்டால் எதைச் சுவாசிப்பது?