பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

383


206. பணமும் மனமும்

பணம் என்ன செய்யும்?
பணம், நீ என்ன செய்ய நினைக்கிறாயோ
அதைச் செய்யும்!
இந்த உலகத்தில் செல்வாக்கு உள்ளவற்றில்
தலையாயது பணமே!
பணத்தாசை ஆற்றல் மிக்குடையதே!
ஆனால், இது நல்லதல்ல! என்ன செய்ய?
உலகத்து இயற்கை இது!
ஆனால், பணம் கெட்டதா? இல்லை, இல்லை!
பணம் நல்லதூஉம் அன்று; தீயதுரஉம் அன்று.
பணம் படைத்தவன் செயல்கள்
பணத்தைப் பாதிக்கின்றன.
பணம்பற்றிய மனிதனின் சிந்தனையே
பணத்தையும் கெடுக்கிறது!
மனிதனையும் கெடுக்கிறது!
மனிதன் பணத்தினால் மகிழ்வும் துன்பமும் அடைகிறான்!
மனித வாழ்க்கையின் மையம் பணமே!
மனிதனின் மகிழ்வும் துக்கமும்
அவனுடைய பணத்தைச் சுற்றி வருகிறது!
பணம், மனிதனின் கொற்றாளா?
பணம், மனிதனின் எஜமானனா?
இவ்விரண்டின் அணுகுமுறையே
பணத்திலிருந்து பணமுடையோரின்
இயல்பை நிர்ணயிக்கிறது.