பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

385


208. படிப்பினை பலன் தரும்

வாழ்க! கற்றுக் கொள்க!
ஆனால், கற்றுக் கொள்ளுதல் முதல்நிலை;
அடுத்தது வாழ்தல் !
வாழ்க்கையின் குறிக்கோளும் அதுவே!
நல்லவழியில் படிப்பினைகளை எடுத்துக்கொள்!
நம்மை நாம் அறிதல் முதற்படி!
நாம் என்ன செய்ய வேண்டும்?
நாம் செய்ய வேண்டியதைச் செய்ய
வேண்டுவதெல்லாம் என்ன?
இம்மூன்றினையும் அடையும் வாயில்கள் நம்முன் உள்ளன!
ஒவ்வொருவருக்கும் நாக்கு உண்டு!
வினா எழுப்பி விடை கேட்டறிந்து கற்றுக்கொள்!
நாக்கு படித்தவனுக்கும் உண்டு!
படியாதவனுக்கும் உண்டு!
நாக்கு, இளைஞனுக்கும் உண்டு; கிழவனுக்கும் உண்டு!
ஏன்?
நண்பனுக்கும் நாக்கு உண்டு; எதிரிக்கும் உண்டு!
நினைவிலும் படிப்பினை உண்டு;
மறத்தலிலும் படிப்பினை உண்டு!
மகிழ்தலிலும் படிப்பினை உண்டு;
துயரத்திலும் படிப்பினை உண்டு!
அமைதியிலும் படிப்பினை உண்டு;
வெகுளவிலும் படிப்பினை உண்டு!
சிக்கனத்திலும் படிப்பினை உண்டு;
செலவிலும் படிப்பினை உண்டு.
முயற்சியிலும் படிப்பினை உண்டு;
தவறுகளிலும் படிப்பினையும் உண்டு.
வெற்றியிலும் தோல்வியிலும் படிப்பினைகள் உண்டு.
எங்கும் எவையும் படிப்பினை வழங்கும் ஆசிரிய
                                                     அமைப்பே!
ஆசிரியர்களுக்குப் பஞ்சமில்லை!
மாணவர்கள் என்ன ஆனார்கள்?