பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

387


210. போராட்ட வெற்றி

வெற்றியோ, வெற்றி!
உண்மையில் முயல்வோனுக்குத் தோல்வி ஏது?
விடாமுயற்சியே வெற்றி!
முயற்சியுடையார் இலக்கை அடையாது போனாலும்
அவர் பல வெற்றிகளைப் பெறுவார்!
பரிசுகளையும் பெறுவார்! முயன்ற அளவுக்குப் பெருமை உண்டு!
நிலத்திற்குள் தங்கச் சுரங்கம் என்று
எண்ணித் தோண்டலாம்!
தங்கம் கிடைக்கவில்லை யாயினும்
உடல் வலிமை உடையதாயிற்று!
பரிசுகளைவிடப் போராட்டம் பெரியது! உயர்ந்தது!
மனிதன் போராட்டப் பிராணி போராடட்டும்!
மனிதன் போராட்டத்தின்போது வாழ்க்கையை
விரும்புகிறான்!
கவனத்துடன் களத்தில் நின்று போராடுகின்றான்!
அவனே அவனுடைய இலட்சியமாகி நிற்கின்றான்!
ஒழுங்குமுறைகளைக் காண்கின்றான்!
எழுச்சியும் கிளர்ச்சியும் பெற்று நிற்கின்றான்!
மனநிறைவோடு வாழ்க்கையைச் செலுத்துகின்றான்!
நான் என்பயணத்தை முன்நோக்கிச் செலுத்தினால்
நான் பின்னடைவைத் தவிர்ப்பேன்
இலக்கை நோக்கியே பயணம் தொடரும்! நிற்காது!
பின்னடைவு இல்லை! இல்லை! உறுதி !
என்ன நடந்தால் என்ன? எது வந்தால் என்ன?
வெற்றி உறுதி! வெற்றி! வெற்றி!