பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

391


213. இதய சுதந்திரம்!

சுதந்திரம்! இன்று நம்முடைய நாள்! நமக்கே
                                               உரிமையுடையது!
இன்றைய நாள் நமக்குச் சுதந்திர நாள்!
ஆனால், உண்மையில் சுதந்திரமா?
சட்டம் கூறும் சுதந்திரம் என்று!
சட்டப்புத்தகத்தில் 'சுதந்திரம்' என்று எழுதியிருக்கலாம்!
உண்மை என்ன?
சுதந்திரத்தைச் சட்டம் வழங்க இயலாது!
எந்த மனிதனின் இதயம் சுதந்திரமாக இயங்குகிறதோ
அவனே சுதந்திரத்துக்கு உரியவன்!
சுதந்திர மனிதனுக்கு வெறுப்பு இல்லை!
பயத்தின் பதற்றம் இல்லை! மனச்சாட்சியின் அமுக்கம்
இல்லை!
அவன் சந்தேகப் பிராணியல்ல!
இவனுக்கே இந்த நாள் சொந்தம்!
ஏன்? அவன் அவனாகவே இருக்கிறான்!
அவன் சுதந்திரனாக இருப்பதால் விரைந்துவரும்
காலத்தை ஏற்பான்!
எதிர்வரும் காலம் அவனுடையது!
அவன், சுதந்திரத்தால் பெற்ற பயன் இது!
கடிகாரத்தின் 'டிக்' 'டிக்' ஓசை இவனுக்கு நாளை
                                                 வழங்குவதில்லை!
அவனுடைய இதயத் துடிப்பே
அவனுடைய நாளை வழங்குகிறது!