பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

407



226. உலகம் உன்னைத் தேட வாழ்!


பூவுலகில் பலப்பல உண்டு!
மண்ணின் மேலும் உண்டு மண்ணுக்குள்ளும் உண்டு!
மண்ணின்மேல் காணப்படுவனவற்றுள்ளும்
மண்ணுக்குள் மறைந்து கிடப்பனவற்றுக்கே
விலை மதிப்புக் கூட என்பதை அறிக உணர்க!
உலகெலாம் ஆட்டிப்படைக்கும் தங்கம்
மண்ணில் புதைந்து கிடக்கிறது!
தேடிக் கொணர்கின்றனர்;
நாட்டோர் போற்றும் நவரத்தினங்களை
மண்ணுக்குள்ளிருந்தே தேடி எடுத்து
அணிந்து மகிழ்கின்றனர்.
பூத்துக் குலுங்கும் மரங்களின் வேர்கள்
மண்ணிற்குள்ளே யாம்;
விண்ணளந்து காட்டி வினைமறைக்கும்
திருக்கோயில்களைத் தாங்கிநிற்கும் அடிக்கற்கள்.
மண்ணிற்குள்ளேயாம்!
ஆதலால்,
அம்பலம் ஏறக் கருதாதே!
உலகம் உன்னைக் காண நடக்காதே!
இந்த உலகம் உன்ன்ைத் தேடும் நிலையில்
வெளிச்சம் போடாமல் அடக்கமாக வாழ்க!
முகமன், புகழ்ச் சொற்களைக்
கசப்பெனக் கடிந்து ஒதுக்குக!
விளம்பரம் வேண்டவே வேண்டாம்!
ஒடி ஒளிந்து கொள்!
உயர்தனிக் கடமைகளைக் கவனமுடன் செய்க:
புவிக்கு அணியாகிடுக!
உலகம் உன்னைத் தேடும்!
தேடச் செய்வதற்காகவே வாழ்க!