பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



5. திருமகள் தேடிச் செல்வாள்!


ராமபுரத்தில் ஒரு செய்தி காட்டுத் தீயெனப் பரவியது. அது என்ன செய்தி: கடவுள், இலக்குமியை - செல்வத்திற்குரிய திருமகளை இராமபுரத்திற்கு அனுப்பப் போகிறார் என்பதே செய்தி, இராமபுரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அளப்பரிய செல்வத்தை அள்ளித்தந்துவிட்டு வரவேண்டும் என்பது கடவுளின் உத்தரவு.

இராமபுரம் விழித்து எழுந்தது. ஒவ்வொருவரும் வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டுக் காத்திருந்தனர் . திருமகள் வருகைக்காக திருமகளும் வந்தாள்! விதி வழியே நடந்தாள்: வீதியின் இரண்டுமருங்கிலும் வாயிற் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தன்னை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கும் மக்களைத் திருமகள் பார்த்தாள்! ஆனால், திருமகள் எந்த வீட்டிற்குள்ளும் துழையவில்லை. வலியவந்து அழைத்துப் போகவில்லை.

வந்த திருமகள் "கருப்பண்ணன் வீடு எது?” என்று கேட்டாள். "கருப்பண்ணன் வீட்டுக்குச் செல்லும் வழி எது?” என்று கேட்டாள். கருப்பண்ணன் வீடு வீதியின் கடைசியில் உள்ளது. குடிசை வீடு, கருப்பண்ணன் வீட்டை விசாரித் தறிந்து கொண்டு இலக்குமி - திருமகள் சென்றாள். வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. யாரும் திருமகளை எதிர் பார்த்துக் கொண்டு காத்திருக்கவில்லை. மாறாகக் கருப்பண்ணன் குடும்பத்தினர் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

திருமகள் பார்த்தாள்: கருப்பண்ணனுக்கே செல்வத்தை, காய்கறித் தோட்டம் மூலம் அள்ளிக் கொடுத்தாள்! ஊக்கமும் உழைப்பும் உடையவர்களை விசாரித்துக் கொண்டு செல்வம் வந்தடையும். ஆதலால், ஊக்கத்துடன் உழைப்போம்! வீட்டுத் தோட்டம் அமைப்போம்! ஆடுமாடுகளை வளர்ப்போம்! செல்வம் குவிப்போம்!

"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை" (குறள் - 594)