பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

420

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



5. அறிவொளி இயக்கக் கதைகள்
1

ரு கிராமத்தில் சுப்பிரமணியன் என்று ஒருவன் இருந்தான். அவன் படித்தது ஆறாம் வகுப்பு வரையில்தான். ஆனால் இயற்கையாக நல்ல மூளையுடையவன். அவன் கையெழுத்து குண்டு குண்டாக நன்றாக இருக்கும். ஆனாலும் மூளைக்குத் தகுந்த செயல் இல்லாமல் சோம்பேறியாய் வாழ்ந்தான்!

சோம்பேறிக்கு வரக் கூடிய குடி முதலிய கெட்ட பழக்கங்களும் வந்துவிட்டன! ஆதலால் எந்த வேலையையும் சரியாகச் செய்வதில்லை. வருவாய் வருவதில்லை. வாழ்க்கையை நடத்த வருவாய் வராது போனால் என்ன செய்வது? பொய்யான வழிகளிலும் ஏமாற்று வழிகளிலும் பொருள் தேட முயன்றான்!

இது அவனுடைய தலை விதியா? இல்லை! தலைவிதி நன்றாக இருக்கிறது! ஆனால் செயற்பாடு சரியாக இல்லை! ஆதலால் எல்லாம் சரியாக அமையாது போனாலும் சரியான அணுகுமுறையும் விழிப்பும் இருந்தால் வாழ்க்கை சீராக அமையும். எல்லாம் சரியாக அமைந்து இருந்தாலும் சரியான செயற்பாடு இல்லையானால் ஒன்றும் பயன் இல்லை.

கடைசியாக சுப்பிரமணியன் கடை வீதியில் அடிபட்டான்! வெட்கப்படத்தக்க ஒன்று!

ஆதலால், வாழ்க்கை அமைவதில் இல்லை. வாழ்க்கை வாழ்வதிலேயேதான் இருக்கிறது.