பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாங்கிய தின் பண்டத்தைத் தின்று கொண்டே நடந்து பேச்சு மேடை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். இடையில் ஒரு பெரியவர் திருவள்ளுவர்தாசனைச் சந்தித்தார். நலம் - நன்மை பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால் தீனி தின்றது திருவள்ளுவர்தாசன் மட்டும்தான்! எதிரில் நின்று பேசிக் கொண்டிருந்தவருக்குக் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஒரு ஏழை - இரந்து வாழும் நிலைக்குச் சமூகத்தால் தள்ளப்பெற்றவர் - வந்து பசிக் கொடுமையால் அலறினார். திருவள்ளுவர்தாசன் தின்று கொண்டே இருந்தாரே தவிர, ஏழைக்குத் தினையளவும் பகிர்ந்து கொடுத்தாரில்லை.


காலம் நெருங்கியது. திருவள்ளுவர்தாசன் மேடைக்குச் சென்றார். சற்று நேரத்தில் பெரியவரும் மேடைக்கு வந்தார். மேடையில் இருந்தவர்கள் அனைவரும் எழுந்து பெரியவருக்கு மரியாதை செய்து வரவேற்றனர். பெரியவர் தலைமையில் திருவள்ளுவர்தாசன் அறிவுடைமை, அன்புடைமை என்ற அதிகாரங்கள் பற்றி நன்றாகப் பேசினார். மக்கள் ஆரவாரமாகக் கேட்டனர். திருவள்ளுவர் தாசனின் பேச்சு முடிந்த பிறகு கூட்டத் தலைவர் பெரியவர் எழுந்து,

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை

(குறள்-315)

என்ற திருக்குறளுக்கு உரை விளக்கமாகவும்.

என்புதோல் போர்த்த உடம்பாகவும் விளங்கும் திருவள்ளுவர்தாசன் பேச்சைக் கேட்பீர்கள் என்று கூறினார். திருவள்ளுவர்தாசன் வெட்கிப் போனார்.

"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

(குறள்-664)