பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

430

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேட்டுக்குடியினர் இரண்டு பேருக்குச் சில மாதங்களுக்கு முன் பட்டா வழங்கப்பட்டதாகக் கூறினார்!

எந்த அடிப்படையில் பட்டா? ஏன் பட்டா? என்ற வினாக்கள் அலைமோதின! கோட்டாட்சி அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைத் தூக்கிக் கொண்டு செல்லப் பெற்றது! இதற்கிடையில் மயில்வாகனத்திடம் முயற்சியைக் கைவிடும்படி வற்புறுத்தல் ! அதே போழ்து அவசர அவசரமாக நிலம் உழப்பெறுகிறது! கோட்டாட்சித் தலைவர் நிலப்பட்டா வழங்கியது முறை கேடான செயல் என்று பட்டாவை ரத்து செய்கிறார்! இப்படியும் சில அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி! பட்டா ரத்து செய்தது மனம் பொறாமல் நிலச் சுவான்தார்கள் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மேல் முறையீடு செய்கிறார்கள். மயில்வாகனமும் கூடவே போகிறார்.

இந்த நிலையில் பணம் பரிமாறப் படுகிறது. சாராயம் தாராளமாக வழங்கப் பெறுகிறது. கூடவே பயமுறுத்தலும் சேர்கிறது! ஆதி திராவிடர்கள் சாராய மயக்கத்தில் கையில் கிடைத்த காசுகளுக்காகவும் மிரட்டலுக்குப் பயந்தும் "சாலை ஒரத்தில் தேர்வு செய்யப்பட்ட இடம் வேண்டாம்; பழைய இடமே போதும்; வசதியாக இருக்கிறது” என்று எழுதி வாங்கி விட்டார்கள்! வல்லாங்கு வாழ்வோர் வெற்றி பெற்றனர்! வாயில் வாயில்லாப் பூச்சிகள் வாழ்விழந்தனர்!

10

மாங்கொம்பைச் சேர்ந்த மாறன், ஒரு நல்ல இளைஞன்! அவனுடைய பெற்றோர்கள் ஏழை விவசாயக் கூலிகள். மாறனை, பல்வேறு தொல்லைகளுக்கிடையில் பத்தாவது வகுப்புவரையில் படிக்க வைத்தனர். மாறன் நன்றாகப் படித்திருந்தால் மேலும் படிக்க வைத்திருப்பர்.