பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆயினும் எந்தக் குறையும் குற்றமும் இல்லை. பூசையில் இடைத்த சம்பாத்தியத்தில் நிறைய செலவில்லாததால் கொஞ்சம் தொகை உண்டு. இந்தத் தொகைகளைச் சேர்த்தும் வைத்திருந்தார்.

இந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவருக்குக் காலம், நியமங்கள், நியதிகள் கிடையாது. பரட்டைத் தலை; அழுக்கு உடை, கிடைத்ததை உண்பார் வழிபாடு என்று ஒரு சடங்கு இல்லை! ஆனால், திடீர் திடீர் என்று மெளனத்தில் ஆழ்ந்து விடுவார். சற்று நேரம் கழித்துச் சிரிப்பார் களிப்பார்; தேனிப்பார்; எழுந்து நின்று ஆடுவார்; நல்ல மெளன அமைதியில் இருந்து அமுத மொழிகள் பொழிவார்; அந்தச் சொற்றொடர்கள் அமுதமேயாம்.

இந்தத் துறவிக்கு வாழ்க்கைப்பட்டவள் ஒருத்தி உண்டு. அவளும் உடன் வந்திருந்தாள். அவள் உலகியலைச் சார்ந்துதான் வாழ்கிறாள். ஆனாலும் இந்தத் துறவியின் மனப் போக்கை அறிந்து தொண்டு செய்து வந்தாள். அவர் தன் மனைவியுடன் சில சமயங்களில் சரசம் செய்வார், பலர் முன்னிலையில்!

இவர் துறவியா? பைத்தியமா? என்றெல்லாம் கேள்வி எழுந்தது! பலர் எள்ளி நகையாடினர்! ஆனால், சங்கர சாது. குழுவிற்குத் தலைமை. யார் துறவி என்ற விவாதம்! கடைசியாக ஒருநாள் - முனிவர் அருளிச் செய்தார்.

"பொறிகளில் துறவு, துறவு அல்ல; புலன்களில் துறத்தலே துறவு. பெண்ணை மட்டும் துறத்தல் அல்ல. மானம், புகழ் முதலியவற்றையும் துறத்தலே துறவு. புளியம்பழம் ஒருபக்கத்தில் பழுத்திருக்கிறது. முழுதும் பழுத்து ஒட்டிலிருந்து முற்றாக வெளியே வர தகுதியுடையதா யிருப்பதே புளியம்பழம். அது போன்றதே துறவு! ஒழுக்கம், பழக்கம் ஆகியவைகூட வேண்டாதனவாகி விடும்”

<poem"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிபு” (குறள்-21) </poem>