பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



8. பூமிதேவியின் சிரிப்பு


கிள்ளியூர் ஒரு சிற்றுார்; கிராமம். இயற்கை வளம் கொழிக்கும் கிராமம். இறைக்க இறைக்க ஊறும் கிணறுகள் அங்கே நிறைய உண்டு. கிள்ளியூர் கோவிந்தசாமி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். சொத்து நிறைய உண்டு. ஆனால், வந்ததுதான் வரவு. வரவேண்டிய வரவுகள் வருவதும் இல்லை. அதைப்பற்றி கோவிந்தசாமியும் கவலைப்படுவதில்லை.

கோவிந்தசாமியின் வீட்டுத் தோட்டம் அளவில் பெரியது. ஒரு ஏக்கருக்கும் மேல் இருக்கும். இரண்டு கிணறுகள் உண்டு. கிணறுகளுக்கு நீர் இறைவை இயந்திரங்களும் பொருத்தப்பெற்றுள்ளன. ஆயினும் கோவிந்தசாமி வீட்டுக் கொல்லை தரிசு. கிணறுகளைப் பயன்படுத்துவ தில்லை. கோவிந்தசாமிக்கு வேலை பரிசுச் சீட்டுகள் வாங்குதல், பரிசுச் சீட்டுக் குலுக்கல் நாளை எதிர்பார்த்துக் காத்திருத்தல். கடந்த 10 ஆண்டுகளாகக் கோவிந்தசாமியின் துரதிர்ஷ்டம் ஒரு பரிசுகூட விழவில்லை. ஐயோ, பாவம்! ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கவில்லை. கையில் இருந்த காசுகள் கரைந்து போயின. கடைசியில் சம்பாதிக்க முடியாத ஏழையாகிவிட்டான்.

ஒரு நாள் நண்பகல் வருத்தும் பசித் துன்பம், வீட்டுக் கொல்லைப் புறத்தில் தோட்டத்தில் உட்கார்ந்து அழுதான். அழுது அழுது அயர்ந்து துங்கிவிட்டான். கனவில் ஒரு பெண் நகைத்துச் சிரிக்கும் குரல் கேட்டது. கோவிந்தசாமி விழித்தான். ஆனாலும் எழுந்திருக்க முடியவில்லை. மீண்டும் பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. அதோடு "ஏன் அழுகிறாய்? கவலைப்படுகிறாய்? இதோ உன் முன்னே கிடக்கும் வளமான மண்ணைப் பார்! உன் கைக்கும் நிலத்துக்கும் உழ்ைப்பின் மூலம் உறவுண்டாக்கு! நிலத்தோடு (என்னோடு) உழைப்பின் மூலம் பேசு! நான் அள்ளித்