பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
460


பூர்வாசிரம நாள்கள்

நம் அருள்நெறித் தந்தை குருமகாசந்நிதானம் மதுரைக் கிளைத் திருமடத்திற்கு எழுந்தருளும்போது சிறிய வயதில் வணங்கி அருட்பிரசாதம் பெற்றதுண்டு. நகர வளர்ச்சி நெருக்கடியால் மகாசன்னிதானம் பயணியர் விடுதியில் தங்கும் நிலை ஏற்பட்டது. நாமும் கல்வி பயின்ற காலத்தில் மகாசன்னிதானத் தைத் தரிசிக்கின்ற வாய்ப்பு நமக்குக் குறைந்து போனது.

‘புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்’

என்ற குறளுக்கு ஏற்ப, சேய்மையிலிருந்து மகாசன்னிதானத்தின் செயல்களைச் செய்தித் தாள்கள், வானொலி வழியே உற்றுநோக்கி உள்ளக்கிழியில் உரு எழுதி வந்தோம். கல்லூரியில் பயிலத் தொடங்குகின்ற காலத்தில் மதுரையில் நடைபெறும் மகாசன்னிதானத்தின் ஆன்மீக, இலக்கிய சொற்பொழிவுகளைத் தொலைவிலிருந்து கேட்கும் தொண்டர் ஆனோம்.

வயிற்றுக்கும் மூளைக்கும் போராட்ட்ம்! எப்பொழுதும் வயிறுதர்னே வெற்றிபெறும், நம் வாழ்விலும் அதுவே வெற்றி பெற்றது. வாழ்க்கைக்கு வழிகாட்டவேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுக்கும்பொழுது வயிற்று ஊருக்குப் போகின்ற பாதைதானே என்று பலமுறை சரிபார்த்துவிட்டுப் பலரும் வழிதவறிப் போகின்றார்கள். அறிவியல், பொறியியல், மருத்துவஇயல் பயின்றால் தங்கத்தட்டில் வேலை கிடைக்கும் என்றும் தமிழ் இலக்கியம் பயின்றால் வாழ்வில் எதிர்காலமே இல்லை என்றும் கருதும் வழக்கமான மாயையில் நாம் சிக்கிக் கொண்டோம். எந்தத் துறையினைத் தேர்ந்தெடுத்தாலும் தேர்ந்தெடுத்த துறையில் கடுமையான உழைப்பு விடாமுயற்சி, தன்னார்வம், அர்ப்பணிப்பு உணர்வு இருந்தால் முன்னேறலாம் என்பதை இளைய தலைமுறைக்குச் சுட்டிக் காட்டும் வழி காட்டுதல்கள் எப்பொழுதும் குறைவு. அறிவியல் அமிலத்திற்குள் நம் தமிழ் இலக்கியத்தாகம் அவிந்து போனது. இலக்கிய மேடைகளில் உலர்வந்த சுதந்திரச் சிறகுக்ள் வெட்டப்பட்டன். ஆய்வுக்கூடமே தவச்சாலை ஆனது. அமிலத்தில் வெந்து போன இலக்கிய இதயத்தின் இலக்கியத் தாகத்தைத் தீர்க்கும் அமுத ஊற்றாய் அருள்நெறித் தந்தையின் மேடைகள் நம்மை ஈர்த்தன. அருள்நெறித் தந்தையின் இரவு நேரப் பல்கலைக்கழகங்களில் துர இருந்து அகரம் வாசிக்கும் ஏகலைவ்னாய் நாம்.