பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

465

நல்லிணக்கப் பேரணிப் பணி ஆற்றினார்கள். மகாசன்னிதானம் இட்ட கட்டளையை நாம் நிறைவேற்றிக் கொண்டிருந்தோம். பேரணிக்கு இருதினங்களுக்கு முன்பு நாம் மகாசன்னிதானத்திடம் நமது கருத்தை விண்ணப்பித்தோழ். "சமய நல்லிணக்கம் ஒருதரப்பாய் இருந்துவிடக் கூடாது" என்றும், "சிறுபான்மை மக்கள் பெறும் சலுகைகள், உரிமைகள்" பற்றியும் பேசினோம். மகாசன்னிதானம் நம்மோடு மிக நீண்ட நேரம் பேசினார்கள். நிறைவில் நல்லிணக்கத்திற்கு நாம் இணங்கினோம். பேரணிப் பணிகள் மிக விரைவாகவும் நிறைவாகவும் சிறப்பாகவும் நிகழ்ந்தன. பிரமாண்டமான பேரணி மிகச் சிறப்பாக நடந்தேறியது. பலரும் பாராட்டினார்கள்.

குன்றக்குடியின் உற்பத்திப் பொருள்களின் சந்தை வாய்ப்பிற்கான விற்பனை மையம் ஒன்று மதுரையில் தொடங்க வேண்டும் என்று ஆணை இட்டார்கள். நாமே விற்பனை மையத்தைத் தொடங்குவதாக ஒப்புக் கொண்டு, “குன்றக்குடிச் சிறப்பங்காடி” என்ற பெயரில் பல்பொருள் அங்காடி தொடங்கப் பெற்றது. சிவகங்கை ‘பிரியதர்சினி தொலைக்காட்சிப் பெட்டி முதல் குன்றக்குடியில் தயாரான ஊறுகாய், ஜாம் வரை அனைத்தும் விற்பனை செய்யும் விற்பனை நிலையம் தொடக்க விழா மகாசன்னிதானம் தலைமை ஏற்று அங்காடியைத் திறந்து வைத்தார்கள். மண்டல இணைப்பதிவாளர், காவல்துறைக் கண்காணிப்பாளர், தொழில் வணிகக்கழகத் தலைவர் சோலன்கி முதலியோர் பங்கேற்றனர். விழாவில் நாம் வரவேற்றுப் பேசினோம். மகாசன்னிதானம் நம் வரவேற்புரையைக் கூர்ந்து கேட்டார்கள். நமது வரவேற்புரைக்கு அரங்கில் மிகுந்த வரவேற்பு எல்லாப் பெரியவர்களும் நம் பேச்சைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார்கள். தொழில் வணிகத் தலைவர் ஜெட்டலால் சோலன்கி “புதிய நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி கணேசனை எங்களுக்குத் தாருங்கள்.” என்றும் மேடையில் பேசினார். விழா நிறைவாக அமைந்திருந்தது. விழா முடிந்த பின்பும் நாமே பேசப்பட்டோம். ஆண்டுகள் இரண்டு ஓடுகின்றன. ஒருநாள் மதுரை தமிழ்நாடு தங்கும் விடுதியில் இருந்து - மகாசன்னிதானத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு எப்பொழுதும் பயணத்திட்டம் பற்றிய அஞ்சலட்டை மதுரைப் பயணமாய் இருந்தால் மதுரை அலுவலகத்திற்கு வந்து விடும்.


* நம் பூர்வாசிரமப் பெயர்