பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 கவியரங்கக் கவிதைகள்

51


இத்தகைப் பேயர்? இவர்விடும் மூச்சுக்
காற்றினால் வையகம் கருகிப் போய்விடும்!
நிலமகள் நாணிக் கண்மலர் புதைப்பாள்;
வளமெலாம் குன்றி வறியவ ளாவாள்!
சாகுந் தவத்துச் சான்றாண் மையே
உலகத் தேருக் குரியஅச் சாணி!
சிலர்நல் லவராம் செல்வம் சேர்த்திட,
சிலர்நல் லவர்மே லுலக நினைப்பால்,
சிலர்நல் லவராம் அடிஉதைக் கஞ்சி
சிலர்நல் லவராம் இயலா மையினால்
இவரெலாம் நல்லவ ராவரோ? இல்லை!
நல்லன என்பதற் காகவே நாடுவோர்
நல்லவ ராம்அவர் வல்லசான் றோரே!
அவர்தம் இயல்பே நன்மைய தாகும்
வையகம் பிறந்து வாய்மையாற் சிறந்து
மேலோ ராகிய மோகன தாஸ்கரம்
சந்திர காந்தி அண்ணலாம் சான்றோர்
பூமியை உழுது புகழ்பூ ணாது, தம்
புலன்களை உழுது புண்ணி யத்தின்
புண்ணிய மாக மண்ணிடை வாழ்ந்தே
அணிபுகழ் கொண்டார்; அவரே சான்றோர்!
ஊழி பெயரினும் தாம்பெய ராத
ஒருநெறிக் கிலக்கணம் ஒப்பிலா காந்தி
அடிகளின் வாழ்வே! அவர்க்கிணை யாரே?
பாரத நாடே சீறுறு முதலாய்ப்
பாரக மெல்லாம் வாழ்ந்திடப் பறந்தே
ஒயா துழைத்தே உயர்ந்தமா மனிதர்
நேருவை நிகர்த்த சான்றோர் யாருளர்?
மாற்றார் தம்மை மாற்றும் படையாம்
ஆற்றுவார் ஆற்றல் அரும்பணி யென்றான்.