பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இப்படை ஏந்தி வெற்றியைப் பெற்ற
ஏந்தல்நம் அண்ணா எனில்மாற் றுரைதான்
பகர்வா ருளரோ? பழம்பெருங் காஞ்சியில்
பிறந்து கழகம் பேணி வளர்த்தார்;
ஈரோட் டேந்தலின் எழிற்பா சறையில்
தேரத் தெளிந்தார்; நேருற வளர்ந்தார்
காலம் செய்த கோலத் தாலே
பெரியார் தம்மைப் பிரிந்தனர் அறிஞர்
அண்ணா! அவரைப் பிரிந்த பெரியார்
ஆற்றொணா வெகுளி அளப்பில கொண்டார்.
அன்பில் அளித்த அண்ணாகண் ணீரைக்
‘கண்ணிர்த் துளி’யென எண்ணியே கேலி
செய்தார்; வசையெலாம் தொடுத்துச் சினந்தார்:
வாழ்வெலாம் தடுத்தார். ஆயினும் தகைசால்
அறிஞர் அண்ணா பிறர்தீ மைசொலா
நலத்தது சால்பெனும் பெருநெறி நயந்தே
ஒழுகினார்! பேரா உலகிற் பெரிய
வெற்றியும் கண்டார். வியனுறு புகழுடன்
தமிழக அரசினைப் பெற்றநற் சமயம்
பெருமித மின்றிப் பெரியார் தம்மைக்
கண்டிட அவர்மனை கடிதினிற் சென்றே
வாழ்த்துதல் பெற்றே வந்தனர்! அந்தப்
பெருந்தகை மைக்கேது பிறிதொரு தகைமை?
நினைத்திடின் நெஞ்சம் நெகிழ்ந்திடும்; குளிரும்!
சால்பின் மணிமுடித் தன்மைஇஃ தன்றோ?
இத்தகு சால்பின் ஏற்றமார் நெறியே
நாட்டில் நிலைத்திடின் நாடு நலம்பெறும்.
காழ்ப்பங் கில்லை; கலகமும் இல்லை;
காவலும் இல்லை; ஏவலும்! இல்லை
சிந்தைபெற் றோரே சிந்தனை செய்ம்மின்!