பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மெய்யினைப் பொத்தும் விரைவினைப் போலே
தாங்கிய நண்பன் தடுமாற் றமுறும்
வறுமையில் வீழினும் குணநலம் இழந்து
குற்றம் படினும் குறைமறைத் தாங்கே
குணத்தினைக் காட்டுவன் கோதிலாப் பெருமை
செய்குவன்; அவனே சீரிய நண்பன்!
எமதுதோள் சுமையை ஏற்றுத் துணைசெயும்;
தோளில் தோய்ந்து தொட்டிடும் இன்பம்
துய்த்தே மகிழும்; துயரினைப் போக்கும்
அத்தகு தோளென வாழ்வில் அமைந்திடும்
மற்றொரு தோளாம் மனிதனே தோழன்!
இன்றுஅத் தோழனை எங்கே காண்பது?
மாலையில் நிகழும் பொதுமே டைகளில்
நாவினை வளைத்து நன்கு கேட்டிடத்
“தோழர் களே!”என அழைத்திடும் சொல்லினைக்
கேட்டதே யன்றிக் கேண்மையைக் காணோம்!
தொல்லுல கிற்குத் துணையாய் நிற்கும்
துறந்த தூயவன் வாழும் சுடர்மலை
பழநியம் பதியில் பழகு தமிழ்க்கவி
இளங்கம் பன்எனும் இனிய கவிஞர்
தோழனைக் காட்டத் துணிந்து வருகிறார்!

முடிப்பு:

இனிய தமிழில் இளங்கம் பன்உரை
செய்து காட்டிய சீரிய தோழமை
கேட்டனம்! நமது நெஞ்சம்அக கேள்வனை
வேட்டு நின்றது. சிவனெனும் விழுப்பொருள்
சுந்தரர் தமக்குத் தோழனாய் வந்தனன்.
அச்சிவ பெருமான் நச்சியே நம்மைத்
தோழனாய் ஏற்றிடத் துணிந்தா னில்லை!