பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முடியர சன்றிவர்! கவியுல காளும்
முடியர சாம்இவர்; மூத்த தமிழ்க்கவி
முடியர சாம்! இவர் இயல்பினுக் கேற்ப
“அஞ்சா நெஞ்”சினை அணிபெறப் பாடும்
பொருளெனக் கொண்டதில் புதுமைஒன் றில்லை!
பெரியோர் பேசா நாளொன் றில்லை
பேரவை யதற்குச் சுவையினை யூட்டிப்
பேசியறியா தவர்பெரி யார்!அவர்
திரும ணத்தினைக்“கிரிமினல்” என்பார்;
கூடி யிருப்போர் நெஞ்சம் குலுங்கிட
நீமுட் டாளென நிமிர்ந்து பேசுவார்;
“தமிழுக் கும்அமு தென்றுபேர், அந்தத்
தமிழ்எங் கள்உயி ருக்குநேர்” என்றே
நாடெலாம் புகழும். நந்தம் பெரியார்
“காட்டு மிராண்டி மொழி”யெனக் கூறுவார்!
சரியோ, தவறோ தன்உணர் வதனில்
பட்டதைக் கூறுவார்; பட்டதைச் செய்வார்!
இத்தகு “அஞ்சா நெஞ்சினர்” இணையிலா
அருமைத் தலைவரை அணிபெறப் பாடுவர்
புகழ்முடி யரசர் பூந்தமி ழாலே!

3. கவிஞர் தமிழண்ணல்


அமுதத் தமிழின் இனிமையோ டண்ணற்
பண்பும் இணைந்த பக்குவ மிக்கோன்
தமிழண் ணல்வர லாறு படைக்கும்
வண்மைத் தமிழ்கொழி வளமார் கவிஞன்
“வரலாற்று நாயகன்” பெரியார் என்றினங்
காட்டிக் கவியால் நமையெலாம் அழைத்துச்
சென்றிட வந்தார், தெளிவுறு வோமே!