பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

75



அழுத்து கின்றது! இந்த அழுத்தமே
அண்ணா புகழுக்கு அடையாள மாகும்
தமிழின் ஊற்று; ஆங்கில வான்மழை
எனவிளங் கியவர்: உள்ளப் புழுக்கம்
அற்ற தலைமை பெற்றவர்! அரசியல்
பகைகளைக் களைந்து பண்பையே கண்டு
இவரே தலைவர் எனமிக ஏற்றம்
பெற்றவர் அண்ணா! அவர்புகழ் வாழ்க!
பகைப்புலத் தினையும் அணைத்துப்பண் பாட்டுப்
புலமாக் கியநம் அண்ணா வாழ்கிறார்!
அறிஞர்அண் ணாவின் பெரும்புகழ் பாடும்
போராட் டங்களில் புடம்போட் டெடுத்த
மாசறு பொன்னாம் டாக்டர் கலைஞரும்
பொன்மனச் செம்மலும் இணைவா ராகுக!
பெரியார் அண் ணாவிடம் காட்டிய பகைபோல்
பெரும்பகை ஏதும் இவரிடை இல்லையே!
இனிய தமிழகம் வளரநம் அண்ணா
வழியே வழியாம்! மற்றொரு வழியிலை!
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்” - என் பதுகுறள்!
அருமை மிக்க இத்திருக் குறளுக்கு
உரைகண் டனர்பதின் மூன்றுரை காரர்!
புகழ்மணக் கின்ற இக்குற ளுக்கு
எழுத்து, சொல், பொருள் விரித்துப் பயன்என்?
இக்குற ளுக்கு இதுதான் உரையென
வாழ்ந்து காட்டி வையத்திற் குணர்த்திய
அறிஞர்அண் ணாவே உரைவிளக் காயினார்!
நந்தமி ழகத்தின் நந்தா விளக்காம்
புகழ்ஒளி விளக்காம் புண்ணிய விளக்காம்
அண்ணா வின்புகழ் வாழ்க, வாழ்கவே!