பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

87

நம்மின உறவினைக் கெடுக்கும் புகழுக்கு
இரையா காதீர்! இரையா காதீர்!
இனமானம் காத்தல் நந்தம் கடமை!
“குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்”எனும் தமிழ்மறை
விளக்கம் அறிக! இத்திருக் குறட்கோர்
விளக்கமாய் வாழ்ந்தவர் அண்ணா ஆவார்!
பெரியா ரின்கடும் பகைத்தீக் கெதிரில்
அறிஞர்அண் ணாகுளிர் தென்ற லாகவே
விளங்கினார்! சிறிதும் துளங்கினா ரல்லர்!
அண்ணா தேர்தலில் தோற்றிட வேண்டும்
என்பது பெரியார் கொண்டதோர் ஆசை!
ஆயினும் அண்ணா வெற்றியே பெற்றார்!
வெற்றி பெற்ற கொற்றத் தமிழராம்
அறிஞர் அண்ணா அப்பகை மறந்து
பெரியார் மாளிகை நோக்கி நடந்தார்!
தமிழ்நா கரிகம் இதுவெனத் தரணி
உணர்ந்திடப் பெரியா ரிடம்இஃ துரைத்தார்!
“நீயே தலைவன்; இது நின் அரசு”
என்றார்! உலகப் புதுமைஇஃ தன்றோ!
நம்பெருந் தலைவர் காம ராசரைப்
“பொற்காப்பு” எனச்சொலிப் போற்றி மகிழ்ந்தார்!
அண்ணா வழியில் தமிழினம் காப்போம்!
அண்ணா வழியில் தமிழ்க்குடி வளர்ப்போம்!
அஃதே வழியெனச் சபதம்இங் கேற்போம்!

நிறைவு:
பழகிய நாள்கள் சிலவே யாயினும்
அவர்தம் நட்பு மாட்சிமை யுடையது!
அண்ணா!