பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

89



இன்று இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் - கற்காதவர்கள் மிகுதி. கற்றவர்கள் மிகமிகக் குறைவு. கற்றவர்களிலும் அறிவுடையார் மிகமிகச் சிலரேயாம். இன்று இந்தியா சந்தித்துவரும் இன்னல்கள் பலப்பல. ஏன் இந்த அவலம்? எங்கும் எவரிடமும் எடுத்துக் கொண்ட பணியில் சிரத்தையில்லை. அதாவது அக்கறை இல்லை. எங்கும் எவரிடமும் சந்தேகம், பரஸ்பரம் சந்தேகம் நிலவுகிறது. நம்முடைய ஆட்சியமைப்பு, சட்டங்கள்கூட சந்தேகங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. உண்மையில் களத்தில் பணி செய்வோர் சிலர். ஆனால் அப்பணி சிறப்பாக நடைபெறுகின்றதா என்று பார்ப்பவர் பலர். இதனாலேயே, இந்தியா வளரவில்லை. போதிய வளர்ச்சியின்மையின் காரணமாக ஒருமைப்பாடு கால்கொள்ளவில்லை. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, கடன் சுமை இவற்றால் நாடு நலிவடைந்து வருகிறது. “அறிவற்றவன், சிரத்தையை இழந்த மனிதன், ஐயுறுகிற மனிதன் கெட்டே போகிறான். அதனாலேயே நாம் கேட்டின் அண்மையிலேயே இருக்கிறோம்.” என்ற சுவாமி விவேகானந்தரின் உரையை எண்ணுக உணர்வு கலந்த நிலையில் உன்னுக; மாற்றங்களை விரும்பி வேட்புறுக.

மனிதனை வளர்க்கக் கல்வி தேவை. அதுவும் ஆரம்பக் கல்வி இன்றியமையாதது. ஆரம்பக் கல்வியில் தரம் பேணப்படுதல் வேண்டும். ஒரு குழந்தைக்கோ இளைஞனுக்கோ முன்னேற்றத்திற்குரிய கல்வியைப் பெற உரிமை உண்டு. அவர்களுக்கு வாழ்க்கையின் அடிப்படைத் தேவையாகிய சிறந்த கல்வியை வழங்குவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும். கடமை மட்டுமல்ல, பொறுப்பும் ஆகும். ஏன் பெற்றோர்களுடைய கடமை மட்டும்தானா? சமூகத்தின் பொறுப்பும், கடமையுமாகும். சமூகத்தின் பொறுப்பும் கடமையும் மட்டுமன்று அரசின் தலையாய கடமையுமாகும். கல்விக்குச் செலவிடும் தொகை கொழுத்த வட்டி கிடைக்கும்கு.XV.7.