பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

93


மொழிக் கல்வியும் உள்ளக் கல்வியும் உலகக் கல்வியும் நமது மாணவர்களுக்குத் தேவை. இன்றைய போக்கு நமது மாணவர்களின் தற்சார்பான சிந்தனை வளர்ச்சி, அறிவு வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். தாய்மொழிக் கல்வி ஊற்றுப் பெருக்கனையது. அந்நிய மொழிவழிக் கல்வி காட்டாற்றில் எப்போதோ ஓடிவரும் வெள்ளம் போன்றது. தாய்மொழி வாயிலாக வரலாற்றியலை, அறிவியலை, பொருளியலை, தொழில் நுட்பவியலைக் கற்பின் நமது இளைஞர்கள் வளர்வர். நமது இளைஞர்கள் - மாணவர்கள் அறிஞர்களானால்தான் தமிழ்மொழி வளரும், தமிழ்நாடு வளரும். ஆதலால் தமிழ்நாட்டில் பயிற்றுமொழி தமிழாகவே இருத்தல் வேண்டும். அதேபோழ்து ஆங்கிலத்தை ஒரு மொழியாக நன்றாகப் படிக்கவும் வேண்டும். ஏன், இன்று பல மொழிகளையும் நமது இளைஞர்கள் கற்கத் தூண்டும் வகையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் "மொழிகளின் அவை" அமைப்பதை ஒரு கொள்கையாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.

கல்வி, ஓர் இயக்கமாதல் வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருக்குறள்:

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

என்று கூறியது.

'கற்க' என்பது ஆணைச் சொல். ஆம், யாதொரு காரணமும் கூறாமல் அனைவரும் கற்க வேண்டும். மனிதர்கள் தங்களிடமுள்ள உள்ளம், மனம், புலன்கள், பொறிகள் ஆகியவற்றில் உள்ள குற்றங்கள் நீங்குவதற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும். உயிர்களைச் சார்ந்த நோய்க்கு நல்ல கருத்துக்களே மருந்து. உயிர்க்குலம் குற்றங்களினின்றும் விடுதலைப்பெற்று நல்லெண்ணம்,