பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

95


அதேபோழ்து ஆசிரியர்களுடைய பொருளாதார வாழ்நிலை முதலியன கடந்த காலத்திருந்ததைவிட உயர்ந்திருக்கிறது. ஆயினும், மேலும் இன்னமும் ஆசிரியர்களுடைய வாழ்நிலைத் தரத்தை உயர்த்தவேண்டும். இந்தப் பொறுப்பு அரசுக்கும் சமூகத்திற்கும் இருக்கிறது. இத்துறையில் அதிகக் கவனமும் முயற்சியும் தேவை.

அதுபோலவே, ஆசிரியர்களுடைய கல்வி நிலை, கலாசார நிலையையும் வளர்த்து உயர்த்தியாக வேண்டும். திருவள்ளுவரின் "அறிதோ றறியாமை” என்ற திருக்குறள் வரி, சமுதாயத்தில் வேறு எவருக்குப் பொருந்தினாலும் பொருந்தாது போனாலும் ஆசிரியர் உலகத்திற்குப் பொருந்தும்; பொருந்தவேண்டும். ஆசிரியர்களுடைய அறிவுத் திறனும் செயல்திறனும் போதிக்கும் திறனும் இடையறாத நிலையில் வளர - வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பெற வேண்டும். இன்று இந்தச் சூழ்நிலை இல்லை. பள்ளிகளிலும் - மாவட்ட அளிவிலும் ஒப்புநோக்கு நூலகங்கள் (Reference library) தேவை. செய்முறை ஆய்வுக் கூடங்கள் அமைய வேண்டும். ஒர் ஆசிரியர் திறமையாகப் பாடம் சொல்லித்தர வேண்டுமெனில், பல மணி நேரம் அவர் சிந்திக்க வேண்டும்; கற்க வேண்டும்; குறிப்புகள் தயாரிக்க வேண்டும். இத்தகு அருமையான முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதற்குரிய வசதிகள் அளிக்கப்பெறுதல் வேண்டும்; சூழ்நிலைகள் உருவாக்கப்பெறுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியர்களின் பொருளாதாரத் தேவைகள் நிறைவு செய்யப்பெறுதல் வேண்டும். ஆசிரியர்களுடைய வாழ்க்கைத் தேவைகள் நிறைவேறாத நிலையில் ஆசிரியர்கள் ஓய்வு நேரங்களைப் பொருள் செய்யும் முயற்சிக்கே பயன்படுத்துவர். இதனால் கற்கும் நிலை பாதிக்கும்; கல்வி உலகம் தரத்தை இழக்கும்; எதிர்காலம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்பதை அரசு அறிந்து உரியன செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவோமாக!